பொதுமக்களுடன் வந்து அட்சியரிடம் மனு அளித்த முன்னாள் அமைச்சர்!
Coimbatore (south) King 24x7 |29 July 2024 10:15 AM GMT
வனத்துறையினர் முறையாக செயல்படுவது இல்லை என குற்றச்சாட்டு.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூர் பகுதியில் நேற்று காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அதே யானை இன்று காலை பொதுமக்கள் சிலரையும் தாக்கியது.இரு தினங்களில் யானை தாக்கியதில் 8 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அந்த பகுதி பொதுமக்களுடன் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.அவருடன் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன்,கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன்,ஏ.கே.ஸ்ரீல்வராஜ் உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் உடன் வந்திருந்தனர்.அப்போது அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என காவலர்கள் தெரிவித்ததால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனையடுத்து அனைவரும் ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கபட்டனர்.பின்னர் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து பேசிய பின் மாவட்ட ஆட்சியர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் பொதுமக்களை சந்தித்து பேசினர்.அப்பொழுது யானை நடமாட்டத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பொதுமக்களிடம் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் மனு கொடுக்க வந்த பொதுமக்களை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதி மறுக்கபட்டதாகவும் பிரச்சினையை சொல்ல வந்த மக்களை தடுப்பது என்பதை ஏற்க முடியாது என தெரிவித்தார். தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி யானைகள் வருவதன் காரணமாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தார். விராலியூர் பகுதியில் காட்டுயானை தாக்கியதில் நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று காலை பொதுமக்களை யானை தாக்கி உள்ளது என தெரிவித்தவர் வனத்துறையினர் யானைகளை விரட்டுவதில் முறையாக செயல்படுவதில்லை எனவும் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய நிதி உதவியும் வழங்குபடுவதில்லை என தெரிவித்த அவர் தொண்டாமுத்தூர் பகுதி விவசாயிகளுக்கு டார்ச் லைட் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.வனப்பகுதி அருகில் அகழி,மின்வேலி போன்றவை அமைக்க வேண்டும் எனவும் அதை முறையாக தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு அதிகமாக வழங்க வேண்டும் என தெரிவித்தார்.நேற்று யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் வனத்துறையினர் அங்கு பணியில் இருந்திருந்தால் இன்று காலை மக்கள் காயம் அடைந்து இருக்க மாட்டார்கள் என தெரிவித்தவர் பொதுமக்களை தொடர்ந்து தாக்கி வரும் சம்மந்தபட்ட யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். காட்டுயானைகளை விரட்டுவதில் கோவை வனத்துறை உரிய நடவடிக்கையினை மேற்கொள்வதில்லை என குற்றம்சாட்டிய அவர் யானைகளை விரட்ட உரிய நடவடிக்கைகள் எடுப்பதை வனத்துறை உறுதி செய்ய வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
Next Story