அரிசி கடையில் தகராறு செய்த மூட்டை தூக்கும் தொழிலாளர்கள்
Komarapalayam (Pallipalayam) King 24x7 |26 Aug 2024 12:16 PM GMT
வட மாநில தொழிலாளர்களால் வாழ்வாதாரம் பாதிப்பதாக உள்ளூர் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் அரிசி கடையில் வாக்குவாதம் செய்தனர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். தினந்தோறும் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள், மற்றும் உள்ளூர் பகுதிக்கு தொழிற்சாலைகளுக்கு ,ஜவுளி குடோன்களுக்கு பாரம் ஏற்றி வரும் வாகனங்களில் சென்று, மூட்டை பாரங்களை இறக்கியும், ஏற்றியும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,ஞாயிற்றுக்கிழமை அன்று பள்ளிபாளையம் தனியார் காகித ஆலைக்கு செல்லும் சாலையில் தனியார் அரிசி கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் வெளி மாநில தொழிலாளர்களைக் கொண்டு அரிசி மூட்டைகளை இறக்குவதாக உள்ளூர் மூட்டை தூக்கும் தொழிலாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தனியார் அரிசி கடையை முற்றுகையிட்ட உள்ளூர் பகுதி மூட்டை தூக்கும் தொழிலாளர்கள், இப்படி வெளி மாநில தொழிலாளர்களைக் கொண்டு பணிகளை செய்வதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இது இதுகுறித்து பலமுறை எச்சரித்தும், இதேபோக்கை தொடர்வதாகவும், அரிசி கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு அசாதாரண சூழல் ஏற்படவே, தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார், இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி உள்ளூர் பகுதியை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளர்கள், வட மாநில தொழிலாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பள்ளிபாளையம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story