ஆசிய அளவிலான நீர் சாகச விளையாட்டு போட்டிக்கு வீரர்கள் தேர்வு
Thoothukudi King 24x7 |29 Aug 2024 12:04 PM GMT
தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை கடல் பகுதியில் நடைபெற்ற Kiteboarding கடல் நீர் சாகச விளையாட்டுப் போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து கடல் சாகச விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை நிரூபித்தனர் வெற்றி பெற்ற வீரர்கள் ஆசிய அளவிலான நீர் சாகச விளையாட்டு போட்டிக்கு தேர்வு.
தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடையில் தேசிய அளவிலான கைட் போட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 25ம் தேதி துவங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில், பாம்பே, கோவா கர்நாடகா, மைசூரு, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் பனையூர் பகுதியைச் சார்ந்த முருகேசன் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டி சென்றார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை அசாம் மற்றும் ஒரிசா பகுதிகளைச் சார்ந்த வீரர்கள் பரிசு கோப்பை வென்றனர். இந்தியாவில் கைட் போட்டிங் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களை கண்டெடுத்து ஊக்கப்படுத்தும் விதமாக இப்போட்டி நடத்தப்படுகிறது. . நீர் சாகச விளையாட்டு போட்டியான இதை கண்காணிக்க சர்வதேச அளவில் இருந்து நடுவர்கள், பயிற்சியாளர்கள் கண்காணிப்பு குழுவினர் வந்திருந்தனர். அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலின் படி போட்டி நடைபெற்றது. தற்போது 4வது முறையாக தேசிய அளவிலான கைட் போட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடையிலும் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ஆசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு பின் அவர்கள் பல்வேறு நாடுகளில் நடக்கும் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பார்கள். இந்தியாவில் இந்த விளையாட்டு தற்பொழுது பிரபலமாகி வருகிறது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் அதிக அளவில் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
Next Story