நாமக்கல் புதிய பேருந்து நிலையம் ‘கருணாநிதி நூற்றாண்டு விழா பேருந்து நிலையம்’ என்ற பெயருடன் தமிழக முதல்வரால் விரைவில் திறக்கப்பட உள்ளது.! -கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி தகவல்
Namakkal King 24x7 |29 Aug 2024 2:27 PM GMT
தொழில் வளத்தில் சிறந்த மாவட்டமாக நாமக்கல்லை உருவாக்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நாமக்கல் மோகனூர் சாலை, முல்லை நகரில் உள்ள நாமக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் பேராசிரியர் அரங்கத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் சி.மணிமாறன் தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்ட திமுக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என் இராஜேஸ்குமார் MP பேசுகையில்... நாமக்கல் மாநகராட்சியில பல்வேறு தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.மேலும், சிப்காட் தொழிற்பேட்டையானது விவசாயிகளை பாதிக்காதவாறு, பசுமை சிப்காட்டாக உருவாகும். நிலம் கையகப்படுத்த தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நிலம் வழங்குவோருக்கு அவர்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் மிகப்பெரிய அளவில் இழப்பீட்டுத் தொகையானது வழங்கப்படும். தொழில் வளத்தில் சிறந்த மாவட்டமாக நாமக்கல்லை உருவாக்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதேபோல, நாமக்கல் மாவட்டத்தில் உற்பத்தியாகும் பால், சேலம் பால் பண்ணைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து பாக்கெட் வடிவில் விற்பனைக்கு வருகிறது. இதற்காக ஒரு லிட்டருக்கு ரூ.3.80 செலவிடப்படுகிறது. இந்த நிலையை போக்கவே, நாமக்கல்லில் ரூ.100 கோடியில் நவீன தானியங்கி பால் பண்ணை அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடத்தை ஆய்வு செய்வதற்காக, குஜராத்தில் இருந்து தேசிய பால்வளத்துறை அதிகாரிகள் நாமக்கல் வருகை தர உள்ளனர். மேலும், செப்டம்பர் முதல் வாரத்தில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நவீன பால்பண்ணைக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதனைத் தொடர்ந்து, வெளிநாடு சென்றுள்ள தமிழக முதல்வர் சென்னை திரும்பியதும், நாமக்கல் புதிய பேருந்து நிலையம் ‘கருணாநிதி நூற்றாண்டு விழா பேருந்து நிலையம்’ என்ற பெயருடன் முதல்வரால் திறக்கப்பட உள்ளது. மேலும், நாமக்கல்–பரமத்தி சாலையில் மிகப்பெரிய வடிவிலான மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையும் திறக்கப்பட இருக்கிறது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முழுமையாக செயல்படவும், அதற்கான தனி அலுவலக கட்டடம் உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமானது, ஊரகப் பகுதிகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. சுமார் 70 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் தகுதிவாய்ந்த 90 சதவீத மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இந்த கூட்டத்தில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் எம்எல்ஏ, சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி எம்எல்ஏ , மாநில பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் .மாயவன், முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் பார்.இளங்கோவன், மாநகராட்சி மேயர் து.கலாநிதி, துணை மேயர் செ.பூபதி, மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story