பாலக்காடு எக்ஸ்பிரஸ் நின்று செல்ல வலியுறுத்தி நூதனபோராட்டம்!
Thoothukudi King 24x7 |3 Sep 2024 1:29 AM GMT
செய்துங்கநல்லூரில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் நின்று செல்ல வலியுறுத்தி வியாபாரிகள் சங்கம் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் செய்துங்கநல்லூர் வளர்ந்து வரும் நகரமாகும். இந்த நகரத்தில் உள்ள ரயில்வே ஸ்டேசனில் நல்ல வருமானம் வருகிறது. மேலும் இந்த ரயில் நிலைம் கிராசிங் நிலையமாகும். செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து ரயில்களும் இங்கே நின்றுசெல்கின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் பாலக்காடு ரயில் இந்த ரயில் நிலையத்தில் நின்று சென்றது. கொரனா காலத்துக்கு பின் இந்த ரயில் இயக்கப்பட்ட போது, செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டத்தில் இந்த ரயில் நின்று செல்ல வில்லை. இது குறித்து பல்வேறு போரட்டத்தினை இந்த பகுதி மக்கள் நடத்தி வந்தனர். செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமையில் அஞ்சல் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் உள்பட பல போராட்டம் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமர்த ராஜ், கருங்குளம் சேர்மன் கோமதி ராஜேந்திரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி செந்தில் ராஜ் போராட்ட குழுவை அழைத்து சமரசம் பேசினார். விரைவில் பாலக்காடு எக்ஸ் பிரஸ் ரயில் செய்துங்கநல்லூரில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். ஆனால் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. கடந்த டிசம்பர் மாதம் மழை வெள்ளத்தில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ் பிரஸ் ரயில் சிக்கிக்கொண்டது . இதில் 800 பயணிகள் சிக்கி கொண்டனர். இந்த மக்களுக்கு, ஸ்ரீவைகுண்டம், புதுக்குடி, தாதன்குளம், செய்துங்கநல்லூர் மக்கள் உதவினர். அப்போது உதவிய மக்களை பாராட்ட வந்த ரயில்வே அதிகாரியிடம் இந்த மூன்று ஊர்களிலும் பாலக்காடு எக்ஸ் பிரஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மக்கள் கோரிக்கையை பரிசீலனையில் வைத்துள்ளதாக ரயில்வே தரப்பு கூறி வந்தது. தாதன்குளம் கிராம மக்கள் வெள்ளத்தில் சிக்கி கொண்ட ரயில்வே பயணிகளுக்கு உணவு வழங்கியதற்காக ரயில்வே சார்பில் பரிசு தொகை வழங்கப்பட்டது. அந்த பரிசு தொகையை கனிமொழி எம்.பி மூலமாக மாவட்ட ஆட்சி தலைவர் லெட்சுமிபதி யிடம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுத்தனர். மேலும் எங்களுக்கு பாலக்காடு எக்ஸ் பிரஸ் ரயிலை செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தினால் போதும் என கோரிக்கை வைத்தனர். அந்த சமயத்தில் ரயில்வே பொது மேலாளர் மக்கள் கோரிக்கையை ஏற்று ஸ்ரீவைகுண்டத்தில் மட்டும் பாலக்காடு ரயிலை நிறுத்த நடவடிக்கை எடுத்தார். ஆனால் தாதன்குளத்தினையும், செய்துங்கநல்லூரையும் புறக்கணித்து விட்டார். கனிமொழி எம்.பி. செய்துங்கநல்லூரில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் நின்றுசெல்ல வேண்டும் என ரயில்வேதுறையிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். செய்துங்கநல்லூரில் புதிதாக நியமிக்கப்பட்ட ரயில்வே ஆலோசனை குழுவினர் முதல் கூட்டத்திலேயே செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் பாலக்காடு ரயிலை நிறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அந்த தீர்மானத்தின் நகலை மத்திய அமைச்சர் எல். முருகன் வசம் கொடுத்தனர். ஆனாலும் செய்துங்கநல்லூரில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் செய்துங்கநல்லூர் தொழில் வர்த்தக சங்கம் நூதன போராட்டம் நடத்த முடிவுசெய்தனர். செய்துங்கநல்லூர் கிராம மக்கள் கோரிக்கை மதுரையில் ஒலிக்கும் வகையில் 500 தபால் அட்டையை மதுரை ரயில்வே பொதுமேலாளர் அவர்களுக்கு அனுப்பும் போராட்டம் நடத்தினர். இதற்காக 500 பேர்கள் மூலமாக அஞ்சல் அட்டையில் தனித்தனியாக கையெழுத்து இடப்பட்டது. அதை செய்துங்கநல்லூரில் ஊர்வலமாககொண்டு வந்து, செய்துங்கநல்லூர் அஞ்சல் நிலையத்தில் உள்ள தபால் பெட்டியில் செலுத்தினர். அதன் பின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு தொழில் வர்த்தக சங்க தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். பொருளாளர் ஆதம், துணைத்தலைவர் குரு மாரியப்பன், உதய சங்கர், துணைசெயலாளர் நவாஸ், கணபதி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைசெயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் பேசினர். இணைசெயலாளர் செல்வநாயகம், சுடலைமணி, பால்சாமி, அபதுல் கனி, கிருஷ்ணசாமி, வேம்புத்துரை, மேகலிங்கம் சாதிக், இப்ராகிம், கந்தப்பன், கருருப்பசாமி, ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொழில் வர்த்தக சங்கத்தினர் செய்துங்கநல்லூர் பஜாரில் இருந்து ஊர்வலமாக வந்து தபால் நிலையத்தில் உள்ள தபால் பெட்டியில் தாங்கள் சேகரித்து வந்த 500 அஞ்சல் அட்டையை அஞ்சல் செய்தனர். இந்த தபால் மதுரை தென்னக ரயில்வே கோட்ட பொது மேலாளருக்கு அனுப்ப படுகிறது. இவர் தான் ஸ்ரீவைகுண்டத்தில் பாலக்காடு ரயிலைல நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுத்தவர். எனவே இந்த தபால் கிடைத்தவுடன் நிச்சயம் ரயில்வே பொது மேலாளர் பாலக்காடு ரயிலை செய்துங்கநல்லூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கையுடன் வியாபாரிகள் கலைந்து சென்றனர்.
Next Story