ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம்! முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம்.
Namakkal (Off) King 24x7 |3 Sep 2024 9:57 AM GMT
காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியில் மாணவ, மாணவியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, அழைப்பு.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,தமிழ்நாட்டின் மாநில மரமான, தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடைய, பரமாரிப்பில்லாமலே காலத்துக்கும் பயன்தரும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் விதமாகவும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து ஒருங்கிணைக்கும் காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி 27.07.2024 அன்று ராமேஸ்வரத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மாண்புமிகு சிவ .வீ. மெய்யநாதன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி தொடங்கப்பட உள்ளது.செப்டம்பர் மாதத்தில் 5 கட்டங்களாக பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காவிரிக்கரையின் இருபக்கங்களிலும் 416 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற உள்ளது. இதேபோன்று, நாமக்கல் மாவட்ட நீர்நிலைகளிலும் பனை விதைகளை நடும் நெடும் பணி தொடங்கப்பட உள்ளது.ஒவ்வொரு ஊராட்சியும் குறைந்தது 1,500 விதைகளை சேகரித்தல் மற்றும் நடவு செய்யவும் வேண்டும். இதில் தன்னார்வலர்கள் (மாணவர்கள் / சமூக சேவகர்கள் / தொண்டு நிறுவனங்கள் / சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்) பங்கேற்று பனை விதைகளை நடுகின்றனர். இதில், பங்கேற்க இருக்கும் மாணவ, மாணவியர்கள், சமூக சேவகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், சமூக வலைதள பிரபலங்கள் udhavi.app/panai என்ற இணையதளம் மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியில் பங்கேற்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். எனவே, இப்பணி சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ச.கலாநிதி., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) இராமசந்திரன், முதன்மை கல்வி அலுவலர் .ப.மகேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பொ. பேபிகலா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (நாமக்கல்) திரு ரகுநாதன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story