ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்க கூட்டம். அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கிய ஆட்சியர்..
Namakkal (Off) King 24x7 |4 Sep 2024 12:11 PM GMT
தாய்மொழிப்பற்றுடன் நாம் அனைவரும் பணியாற்றிட வேண்டும். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, அரசுத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ் வளர்ச்சிக்கு நாமக்கல் மாவட்டத்தின் பங்கு அளப்பறியது. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்கள் பிறந்த மாவட்டம் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். கவிஞர் அவர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டு மிகப்பெரிய ஒன்றாகும். தற்போது நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களது நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாம் அனைவரும் நம் தாய்மொழியான தமிழ் மொழி மீது பற்றுடனும், ஆர்வத்துடனும் பணியாற்றிட வேண்டும். நம் மாவட்டத்தில் சுமார் 54 அரசுத்துறைகள் செயல்பட்டு வருகின்றது. அனைத்து துறைகளிலும் முடிந்த வரை கோப்புகளை தமிழ் மொழியில் தயாரித்திட வேண்டும். நாம் நம் வேலையில் எடுத்துள்ள செயலை 100 சதவிகிதம் முழுமையாக செய்திட வேண்டும். அரசு வேலைக்கு பலரும் முயற்சித்து வருகின்றார்கள். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் போட்டித்தேர்வுகளுக்கு பல இலட்சம் படித்த இளைஞர்கள் போட்டியிட்டு வருகின்றார்கள். குறிப்பாக 6 இலட்சம் வேலை வாய்ப்பிற்கு சுமார் 20 இலட்சம் பேர் போட்டியிடுகின்றார்கள். எனவே, நமக்கு கிடைத்த வாய்ப்பை நாம் சிறப்பாக செய்திட வேண்டும். ஒவ்வொரு முறையும் கோப்பு தயாரிக்கும் போதும் அதனால் பயன்பெறும் பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் குறித்து எண்ணி சிறப்பாக பணியாற்றிட வேண்டும். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் பங்கு பெற்ற அனைவரும் முறையாக பயன்படுத்தி கொண்டு அலுவலக கோப்புகளை முறையாக பிற மொழி பயன்படுத்தாமல் தயாரித்திட வேண்டும். தற்போது நம் மாவட்டத்தில் சுமார் 80 விழுக்காடு கோப்புகள் தமிழ் மொழியில் பின்பற்றப்படுகிறது என தெரித்துள்ளார்கள். மேலும், நாம் அனைவரும் நமக்கு கிடைத்த இப்பணியை தினந்தோறும் விரும்பி சிறப்பாக செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கில் 2021 ஆம் ஆண்டில் சிறந்த மாவட்ட நிலை அலுவலகமாக தெரிவு செய்யப்பட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கும், 2022 -ஆம் ஆண்டிற்கு கூட்டுறவு தணிக்கை துறைக்கும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பொ.பாரதி, தமிழ் செம்மல் பேராசிரியர் முனைவர் அரசு பரமேசுவரன், சேலம் அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரி பயிற்றுநர் தக்ஷ.கி.பி.புகழேந்தி உட்பட பேராசிரியர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story