தமிழகத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை : எடப்பாடி
Thoothukudi King 24x7 |7 Sep 2024 11:35 AM GMT
தமிழகத்தில் மக்களைப் பாதுகாக்கும் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்று அதிமுக பொதுச்செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி கூறினார்.
தமிழகத்தில் மக்களைப் பாதுகாக்கும் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்று அதிமுக பொதுச்செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அவர் செய்தியாளரிடம் கூறியது: திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் புகார் கொடுக்க சென்றால் கூட அதனை பதிவு செய்யாமல் மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இந்த ஆட்சியில் பெண்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. காவல்துறைக்கு சுதந்திரம் அளிக்கவில்லை. பாலியல் சம்பவங்கள், பட்டியிலின மக்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது. நிர்வாக திறனற்ற அரசாக இருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. ஏற்கெனவே முதல்வர் ஸ்டாலின் துபாய், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு சென்று வந்தது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரினோம். ஆனால், இதுவரை வெளியிடவில்லை. தற்போது அவர் அமெரிக்கா சென்றிருப்பது முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல. அவரது மருத்துவ சிகிச்சைக்குத்தான் என பரவலாக பேசப்படுகிறது. ஜெயலலிதா ஆட்சியின்போது இருங்காட்டுக்கோட்டை சோழபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் கார் பந்தயம் நடத்தாமல் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சென்னை மத்திய பகுதியில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து நடத்தியுள்ளனர். இது நாட்டுக்கு தேவைதானா?ரேஷன் கடைகளில் பொருள்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. நாட்டு மக்களுக்கு எவ்வளவு பிரச்சினை இருக்கிறது என்று தெரியாமல் இன்றைக்கு விளையாட்டு துறை அமைச்சர் அரசின் கஜானாவை காலி செய்து வருகிறார். திருநெல்வேலி- தென்காசி நான்கு வழிச்சாலை பணி தாமதமாக நடந்து வருகிறது. பவானி - மேட்டூர் - தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் கிடப்பில் போடப்படுகின்றன. ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மாநில நிதி ரூ.1000 கோடியில் சேலத்தில் அதிமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகயும் திறக்கப்படவில்லை. ஆனால், கட்டாத எஸ்ம்ஸ் பற்றியே பேசுகின்றனர்.
Next Story