அரசு மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் உயர் கல்வி பெறுவதற்கு. உயர்வுக்கு படி உயர்கல்வி எனும் வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.

வாய்ப்புகள் நிறைந்த இந்த உலகத்தில் தங்களுக்கான துறையை சரியான முறையில் தேர்வு செய்து அதில் முழு கவனம் செலுத்தி தங்களது எதிர் கால பாதையினை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரை.
அரசு மருத்துவ கல்லூரி கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்திடும் பொருட்டு உயர்வுக்கு படி உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மாணவ, மாணவியர்களின் கல்வியை ஊக்குவித்திட ஒருவரது வாழ்வில் கல்வி செல்வம் ஒன்றே அழியாத செல்வம் என்பதை உணர்ந்து அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சர் காலை உணவுத்திட்டம், உயர்கல்வி பயில 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு, மாதம் ரூ.1,000/- வழங்கும் தமிழ் புதல்வன் மற்றும் புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். பள்ளி மாணவ, மாணவியர்கள் 10 மற்றும் 12- வகுப்பு முடித்த பிறகு பாலிடெக்னிக் தொழில் கல்வி, நர்சிங், ஆசிரியர் பயிற்சி, மருத்துவம், சட்டம், மற்றும் அரசுத்துறை தேர்வுளுக்கு பயின்று வேலைவாய்ப்புகளை பெற இயலும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் மாணவ செல்வங்கள் உயர்கல்வி பயில ஏற்படும் பயத்தினாலும், சில குடும்ப காரணங்களினாலும் உயர்கல்வி பயிலாமல் இடை நின்று விடுகிறார்கள். நம் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சில மாணவர்கள் மேற்படிப்பிற்கு செல்லாமல் இடைநின்றுள்ளனர். அவர்களுக்கு உயர்கல்வியில் எத்தகைய படிப்பை தேர்வு செய்வது, குடும்ப சூழ்நிலை மற்றும் உயர்கல்வி குறித்த போதிய விழிப்புணர்வு இன்மை போன்றவை முக்கிய காரணமாக உள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயர்வுக்கு படி எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திட உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கோட்டங்களில் இந்நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகள் நிறைந்த மாவட்டம். அனைத்து படிப்பும் சிறந்தது தான். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிரிவில் தங்களின் முழு கவனத்தையும் செலுத்தினால் கட்டாயம் வெற்றி பெற முடியும். வளரிளம் பருவத்தினர் இன்றைய நவீன உலகில் தங்களிடம் உள்ள கைபேசியில் படிப்பு சார்ந்த நல்ல கருத்துகளை எடுத்து கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அரசு பள்ளிகள் நமது பெருமை மற்றும் நமது அடையாளம் ஆகும். அரசு பள்ளியில் ஆசிரியர்கள் மாணவ செல்வங்களை நன்கு ஊக்குவித்து அவர்களின் வாழ்க்கையை உயர்த்திட சிறப்பாக செயல்பட்டு நல்வழிபடுத்தி வருகின்றார்கள். அள்ளும் பகலும் அயராது பாடுபடும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த காலங்களில் மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அனைத்து துறைகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக தொழில் பிரிவுகளான எலக்ட்ரிசீயன், பிளம்பர், டெக்னீசியன், தையல் பிரிவுகளுக்கு ஆட்கள் தேவை அதிகம் உள்ளது. எனவே, மாணவ செல்வங்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொண்டு 100 சதவிகிதம் உயர்கல்வி பயில முன்வர வேண்டும். நான் முதல்வன் திட்டத்தின் குறிக்கோளை நிறைவேற்றிடும் வகையில் நம் மாவட்டத்தில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து, பொள்ளாச்சி டெய் ஸ்கூல் அகடாமி நிறுவனர் திருமதி டெல்பின்புனிதா அவர்கள் தொழில் கல்வி குறித்தும், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தாவரவியல் துறை இணை பேராசிரியர் டாக்டர் வெஸ்லி அவர்கள் மாணவர்களுக்கான ஊக்கம் அளிப்பது குறித்தும் கருத்துரை வழங்கினார்கள். முன்னதாக, இம்முகாமில் அரசு தொழில்பயிற்சி நிலையம், அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி, தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பல்வேறு தனியார் கல்லூரிகள், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கல்வி கடன் முகாம், திறன் மேம்பாட்டு பயிற்சி, அரசு துறையின் சார்பில் உயர்கல்வி திட்டங்கள் குறித்த அரங்குகள், சான்றிதழ்கள் பெறுவதற்காக அரசு இ - சேவை மையம் என மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்ததை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சுமன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் .ஆர்.பார்தீபன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பொ.மா.ஷீலா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் .சதீஷ்குமார், மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் முருகன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி தி.காயத்திரி உட்பட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story