உள்நாட்டு மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு விவசாய கடன் அட்டை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
Namakkal (Off) King 24x7 |10 Sep 2024 2:36 PM GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா உள்நாட்டு மீன்பிடிப்பு பகுதிகளில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு விவசாய கடன் அட்டை ( KCC ) வழங்கும் முகாமில் 11 பயனாளிகளுக்கு ரூ.3.85 இலட்சம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார்
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி, ஆவாரங்காடு சமுதாய கூடத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் உள்நாட்டு மீன்பிடிப்பு பகுதிகளில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு விவசாய கடன் அட்டை ( KCC ) வழங்கும் முகாமில் 11 பயனாளிகளுக்கு ரூ.3.85 இலட்சம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் கடைகோடி மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அனைத்து அரசு திட்டங்களும் பொதுமக்களை சென்றடையும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு வங்கிகள் மூலம் தொழில் கடனுதவிகள் வழங்கப்பட்டு தொழில் முனைவோர்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர். மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசு கடனுதவிகள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் 11 மீனவர்களுக்கு ரூ.3.85 இலட்சம் மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மீன்வர்களுக்கு படகு, மீன்வலை, குறைந்த வட்டியில் தொழில் கடன், மானியத்தில் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இப்பகுதியில் சுமார் 1,250 நபர்கள் மீனவர் சங்கத்தில் பதிவு செய்துள்ளார்கள். அவர்களில் 120 நபர்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கி உள்ளார்கள். அவர்களது கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விரைவில் அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படும். நாளைய தினம் பரமத்தி வேலூர், கவுண்டம்பாளையம் பேரூராட்சியில், ஜேடர்பாளையம் சங்கத்தை சேர்ந்த மீனவர்களுக்கு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் நெசவு தொழில்கள் மேற்கொள்ளும் பகுதிகள் ஆகும். அப்பகுதிகளிலும் நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் உயர்த்தி கொள்ள வேண்டும். மேலும், மீனவர் நல சங்கத்தில் பதிவு செய்துள்ள பெண்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் வழங்கப்படும் கடனுதவிகளை பெற்று சுய தொழில் தொடங்கி தங்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கி நீங்கள் பலருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் உயர்ந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவர் எம்.செல்வராஜ், மீன்வளத்துறை உதவி இயக்குநர் உமா கலைசெல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) க.இராமச்சந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் முருகன், பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் தாமரை ஆகியோர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story