திருச்செந்தூர் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Thoothukudi King 24x7 |14 Oct 2024 9:53 AM GMT
குலசேகரப்பட்டினம் தசராவுக்கு வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
உலக பிரசித்தி பெற்ற குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா விழா மற்றும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் என்பதால் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த இரு தினங்களாக பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இங்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி, பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். குலசேகரன்பட்டினம் கோயில் தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் சனிக்கிழமை (அக்.12) நள்ளிரவு நடந்தது. இதில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று அதிகாலை முதல் குவிந்ததால் கடற்கரையும், கோயில் வளாகமும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. பக்தர்களுக்கு தேவையான வசதிகளை திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Next Story