மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து பெண்கள் முற்றுகை

X
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கீழ்புத்துப்பட்டு ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள மஞ்சங்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அனைவரும் விவசாயக் கூலிகள் ஆவர். இந்நிலையில் கடந்த 30-ஆம் தேதி மரக்காணம் பகுதியில் பென்ஜல் புயல் தாக்கியது. இந்தப் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மஞ்சங்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவில் இருந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களை அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் அன்று இரவு மரக்காணம் பகுதியில் சூறாவளி காற்றுடன் அதிக கன மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதியான மஞ்சங்குப்பம் கிராமத்திற்குள் பக்கிங்ஹாம் கால்வாயில் இருந்து வெள்ளம் புகுந்தது. மேலும் சூறாவளி காற்றினால் மின்கம்பங்கள் சாய்ந்ததால் அப்பகுதியில் மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணமாக அங்குள்ள பொது மக்களுக்கு குடிக்கக்கூட தண்ணீர் ஏற்பட்டுள்ளது. மஞ்சங்குப்பம் பகுதியில் அரசு பள்ளியில் தங்கி இருந்த பொதுமக்களை பார்க்க மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் எங்கள் கிராமத்தில் மின்சாரம் குடிக்க தண்ணீர் குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்கவில்லை. இதன் காரணமாக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே எங்களுக்கு சாப்பிட உணவு குடிக்க தண்ணீர் குழந்தைகளுக்கு பால் மட்டும் கொடுத்தால் போதும். மற்றவைகளை மின்சாரம் வந்தவுடன் நாங்களே பாதுகாத்துக் கொள்ளுவோம் எனக் கூறி உள்ளனர். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி உங்களுக்கு உணவு வழங்க எங்களால் முடியாது. நீங்கள் வேண்டுமானால் மாவட்ட ஆட்சியர் மற்றும் மேல் அதிகாரிகளிடம் அமைச்சர்களிடம் கூட கூறுங்கள் என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் குறை கூறுகின்றனர். அன்றிலிருந்து இதுவரையில் அப்பகுதி பொதுமக்களை எந்த அதிகாரிகளும் நேரில் சென்று பார்க்கவில்லை என கூறுகின்றனர். இதன் காரணமாக அரசு அறிவித்துள்ள நிவாரண உதவித்தொகை எங்கள் பகுதிக்கு கிடைக்குமோ? அல்லது கிடைக்காதோ? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி தான் எனக் கூறி அவரைக் கண்டித்து மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் வாசலில் அமர்ந்து பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போத அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி நீங்கள் கூறும் கோரிக்கையை என்னிடம் கூறக்கூடாது. இந்த அலுவலகத்தின் அருகில் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. அங்கு சென்று உங்களது கோரிக்கையை கூறுங்கள் நானும் உங்களோடு வருகிறேன் என்று கூறி முற்றுகையிட்ட பெண்களை அழைத்துக் கொண்டு நடந்தபடியே வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது மாலை நேரம் என்பதால் அங்கு வட்டாட்சியர். இதனால் அங்கு வந்த பெண்கள் எங்களது குறைகளை எங்கு கூறுவது யாரிடத்தில் முறையிடுவது எங்களுக்கு நியாயம் வழங்கும் அதிகாரிகள் யார் என பரிதாபத்துடன் புலம்பிச் சென்றனர். அதான் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் விவசாயிகளுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களுக்கு என்ன ஆகும் என்பதே இதனைப் பார்த்த பொது மக்களின் கேள்வியாக உள்ளது.
Next Story

