கனமழையால் கூரை வீடு இடிந்து
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செம்பியன் மகாதேவி கிராமத்தை சேர்ந்தவர் முருகதாஸ். கூலி தொழிலாளி. இவரது மகன் கவியழகன். செம்பியன் மகாதேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் இரவு கூரை வீட்டில் முருகதாஸ் அவருடைய மனைவி மற்றும் மகன். மகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் அவரது கூரை வீடு நனைந்து ஊறிப் போயிருந்தது. நள்ளிரவு அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து முருகதாஸ், அவரது மகன் கவியழகன் ஆகியோர் மீது விழுந்தது. இதில், கவியழகன் படு காயமடைந்தார். இடிபாடுகளில் சிக்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த எம்எல்ஏ நாகை மாலி, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கவுதமன் உள்ளிட்டோர் நேரில் சென்று வீட்டை பார்வையிட்டனர். தகவலறிந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முருகதாஸுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story




