இந்துக்களிடம் ஓரவஞ்சனை காட்டுகிறது தமிழக அரசு - இந்து முன்னணி குற்றச்சாட்டு
Chennai King 24x7 |28 Dec 2024 4:51 PM GMT
மதசார்பற்ற அரசு எனக் கூறிக்கொண்டு தமிழக அரசு, இந்துக்களிடம் அப்பட்டமாக ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்கிறது என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், சிறுபான்மையினர் மத தலைவர்களை சந்தித்தார். அப்போது தமிழக அரசு சார்பில் பலவித நிதி உதவிகளை அறிவித்தார் என செய்திகள் கூறுகின்றன. அதில் மிக முக்கியமானது ஜெருசலேம் செல்லும் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 37 ஆயிரம் நிதி உதவி நேரடியாக வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும், சர்ச், மசூதி, தர்கா முதலானவற்றை பழுது பார்ப்பதற்கான அரசின் நிதி உதவியையும் அதிகமாக்கி அறிவித்துள்ளார். தமிழக அரசின் முதல்வர், சிறுபான்மை மதத்தினரின் மத நம்பிக்கையை மதிப்பதும் அதற்காக மக்கள் வரிப்பணத்தில் இருந்து நிதியை வாரி கொடுப்பதும் அவரது கட்சியின் கொள்கை முடிவாக இருக்கலாம். ஆனால், ஜனநாயக முறைப்படி பதவியேற்ற அரசாங்கம் ஓரவஞ்சனையாக, ஒருதலைப்பட்சமாக செயல்படக் கூடாது. அதிமுக ஆட்சியில் கைலாஷ், முக்திநாத் செல்ல கோயில் நிதியில் இருந்து நிதி அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த திட்டமும் 2021 கொரானா பெருந்தொற்று காரணம் காட்டி நிறுத்தப்பட்டது. திமுக ஆட்சி வந்தவுடன் சில பக்தி யாத்திரைகளை இந்து சமய அறநிலையத் துறை அறிவித்தது. ஆனால் அதுவும் முறையாக செயல்படுத்தவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. அதுபோல கிராம கோயில்கள் சீரமைப்புக்கான நிதியும் கோயில் உண்டியல் நிதியிலிருந்து தான் ஒதுக்கப்படுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் கோயில்களை சீரமைக்க ஆயிரம் கோடி நிதி தமிழக அரசு தரும் என கூறியது என்னவாயிற்று? ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடிந்து கடைசி ஆண்டில் இருக்கிறது. ஆனால், தேர்தல் வாக்குறுதியில் கூறியதற்கு அதிகமாகவே சிறுபான்மையினருக்கும் அவர்களின் மத இடங்களும் தமிழக அரசு வாரி வழங்கியுள்ளது. இந்துக்களுக்கு எதுவும் செய்யாமல் பக்தர்களின் காணிக்கையையும் தணிக்கைக்கு உட்படுத்தாமல் தமிழக அரசு சுருட்டுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மேலும் கோயில் இடங்களை சட்டவிரோதமாக அரசு துறைகள் விழுங்குவதற்கு இந்து சமய அறநிலையத் துறை துணைபோகிறது. இத்தகைய ஓரவஞ்சனை போக்கை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. தமிழக முதல்வர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
Next Story