வியாபாரம் மந்தம்
Erode King 24x7 |10 Jan 2025 5:20 AM GMT
தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் வியாபாரம் மந்தம்
ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை கறவை மாட்டு சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தை தென்னிந்திய அளவில் புகழ்பெற்றது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா தெலுங்கானா கோவா போன்ற பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள். இங்கு வாரம்தோறும் சந்தை கூடும் நாட்களில் 400 பசு மாடுகள், 250 முதல் 300 எருமை மாடுகள் விற்பனையாகி வருகிறது. பசுமாடுகள் ரூ.26 ஆயிரம் முதல் 85 ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது. இதேபோல் எருமை மாடு ரூ. 24 ஆயிரம் முதல் 65 ஆயிரம் வரை விற்பனையாகி வரும். சந்தை கூடும் நாட்களில் கோடிக்கணக்கான வர்த்தகம் நடைபெற்று வரும். வியாபாரிகள் மொத்தமாக 10 முதல் 20 மாடுகளை வாங்கி பெரிய டாரஸ் லாரிகளில் ஏற்றிக்கொண்டு செல்வார்கள். ஒரு வெளி மாநில வியாபாரிகள் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை மாடுகளை வாங்கி செல்வார்கள். இந்நிலையில் மாட்டுச் சந்தை நடைபெறும் கருங்கல்பாளையம் பகுதி ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. தற்போது இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதனால் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று வழக்கம் போல் மாட்டுச்சந்தை கூடியது. பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். அவர்களுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பற்றி தெரியாததால் அதிக அளவில் வந்திருந்தனர். ஆனால் உள்ளூர் வியாபாரிகள் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்திருந்தனர். இதனால் மாடுகள் விற்பனை வழக்கத்தை விட இன்று குறைவாக நடந்தது. வியாபாரிகள் கொண்டு செல்லும் பணத்தை தேர்தல் பரப்பும் படையினர் பிடித்து விடக்கூடாது என்பதற்காக மாட்டு சந்தை நிர்வாகம் சார்பில் வியாபாரிகளுக்கு தனியாக ரசீது வழங்கப்பட்டு வருகிறது. பறக்கும் படையினர் சந்தைக்கு வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர். வழக்கமாக 10 முதல் 20 மாடுகளை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் இன்று ஒரு மாடுகளை மட்டுமே வாங்கிச் சென்றனர்.
Next Story