கோவை: பீப் கடை விவகாரம் - பொதுமக்கள் சாலை மறியல் !
Coimbatore King 24x7 |10 Jan 2025 5:50 AM GMT
பீப் கடை விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியல்.
கோவை கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியில் ஆபிதா - ரவிக்குமார் என்ற தம்பதியினர் தள்ளுவண்டி கடையில் மாட்டிறைச்சி தொடர்பான உணவுகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தக் கடைக்கு நேற்று புதன்கிழமை பா.ஜ.க ஓ.பி.சி அணியின் கோவை மாவட்ட செயலாளரான சுப்பிரமணி (36) , அந்த பகுதியின் வார்டு உறுப்பினரான ராமமூர்த்தி என்பவருடன் அங்கு சென்று, அந்தப் பகுதியில் மாட்டிறைச்சி தொடர்பான உணவுகளை விற்பனை செய்யக் கூடாது என்று வற்புறுத்தியதுடன் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.இது தொடர்பான காணொளிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பேசு பொருளானதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகரக் காவல் ஆணையர் ஏ.சரவண சுந்தரை நேரில் சந்தித்தும் தம்பதியர் மனு கொடுத்தனர்.இதை அடுத்து சுப்பிரமணி மீது சட்டத்திற்கு புறம்பாகத் தடுத்தல், மோதலையும், விரோதத்தையும் தூண்டும் வகையில் செயல்படுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து காவல் துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், அந்த பகுதியில் மாட்டிறைச்சி உணவகம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தும் உடையாம்பாளையம் பகுதி பொதுமக்கள் நேற்று இரவு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாநகர காவல் துணை ஆணையர் தேவராஜ் தலைமயிலான காவல் துறையினர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
Next Story