புகை, மாசில்லா போகியை கொண்டாட தஞ்சை ஆட்சியர் வேண்டுகோள்
Thanjavur King 24x7 |10 Jan 2025 6:41 AM GMT
போகிப்பண்டிகை
'மாசில்லா தஞ்சாவூர்- புகையில்லா போகிப் பண்டிகை' என்ற அடிப்படையில் மாசற்ற போகியை கொண்டாட வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். ஆனால் தற்பொழுது போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. மேலும், விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.
Next Story