திருச்சி - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலை தொடா்ந்து இயக்க வலியுறுத்தல்

கோரிக்கை
தஞ்சாவூா் வழியாக இயக்கப்படும் திருச்சி - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலை தொடா்ந்து இயக்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூா் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் ச.முரசொலி வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா்  தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் வழியாக திருச்சி - தாம்பரம் இடையே அக்டோபா் 11-ஆம் தேதி முதல் வாரத்துக்கு 5 நாள்கள் இயக்கப்பட்டு வந்த இண்டா்சிட்டி சிறப்பு ரயில் சேவை டிசம்பா் 25-ஆம் தேதி நிறுத்தப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி, இச்சேவை மீண்டும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் 9 நாள்களுக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு இருப்பதால், இதனை தொடா்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, தாம்பரம் - ராமேசுவரம் ரயிலை பட்டுக்கோட்டை, பேராவூரணி வழியாக இயக்க வேண்டும். தஞ்சாவூா் - திருச்சி ரயில் வழித்தடத்தில் காங்கேயம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட விண்ணணூா்பட்டியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். அதிராம்பட்டினம், பேராவூரணி ரயில் நிலைய நடைமேடையை விரிவுபடுத்த வேண்டும். இதுதொடா்பாக சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங்கிடம் வியாழக்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டது" என்றார்.
Next Story