குலசையில் கடல் அரிப்பால் பனை மரங்கள் சரிந்தது!
Thoothukudi King 24x7 |10 Jan 2025 4:28 PM GMT
குலசேகரன்பட்டினத்தில் கடல் அரிப்பால் 10-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் சரிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது. கோவிலில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில் சுமார் 200 அடி தூரத்துக்கு 8 அடி ஆழத்துக்கும் அதிகமாக அரித்து சென்றது. அங்கு பாறைகள் தென்படுவதால் அவற்றில் நின்று புனித நீராடும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் திருச்செந்தூர்- குலசேகரன்பட்டினம் இடையிலும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. குலசேகரன்பட்டினம் வடக்கூைர அடுத்த காட்டு பகுதியில் கடற்கரையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பனை மரங்களை கடல் அலைகள் வாரி சுருட்டின. சரிந்த சில பனை மரங்களை கடல் அலைகள் இழுத்து சென்றன. மேலும் சில பனை மரங்கள் சரிந்து விழும் நிலையில் உள்ளன. குலசேகரன்பட்டினத்தில் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் கடற்கரையோரத்தில் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் உள்ளன. இவைகளும் கடல் அரிப்பால் சரிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘உடன்குடியில் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக குலசேகரன்பட்டினம் அருகே கல்லாமொழியில் கடலுக்குள் சுமார் 8 கி.மீ. தூரத்துக்கு பாறாங்கற்களைக் கொட்டி பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அருகில் உள்ள பகுதிகளில் கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது. எனவே கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.
Next Story