மாசு இல்லா போகி கொண்டாடுவோம் ஆட்சியர் அறிவுறுத்தல்

மாசு இல்லா போகி கொண்டாடுவோம் ஆட்சியர் அறிவுறுத்தல்
பொதுமக்கள் அனைவரும் மாசு இல்லா போகி கொண்டாட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
அரியலூர், ஜன.11- அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் மாசு இல்லாத வகையிலும், புகை இல்லாத வகையிலும் போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என ஆட்சியர் பொ.ரத்தினசாமி அறிவுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தைப் பொங்கலுக்கு முதல் நாளை போகிப் பண்டிகையாக, பழையன கழிதலும், புதியன புகுதலுமாக கொண்டாடி வருவது வழக்கம். இந்நாளில் திருமகளை வரவேற்கும் முகமாக தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருள்களை எரிப்பது வழக்கம். ஆனால், பொதுமக்கள் பலரும் தங்களிடமுள்ள பழைய டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் இதர தேவையற்றவைகளையும் எரிக்கும் பழக்கத்தை கையாண்டு வருகின்றனர். இத்தகைய செயற்கைப் பொருள்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகைகள் மற்றும் நச்சுத்துகள்கள் காற்றை மாசுபடுத்துகின்றன. மேலும், கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவற்றில் எரிச்சல் ஏற்படுத்துகின்றன. ஆஸ்துமா, மூச்சுத் திணறல் மற்றும் இதர உடல் நலக்கேடுகளும் ஏற்படுகின்றன. பார்க்கும் திறன் குறைபடுகிறது. எனவே, போகிப் பண்டிகையன்று டயர்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட நச்சுப் பொருள்களை எரிக்காமல், மாசுஇல்லாத வகையில் குப்பைகளை அகற்றி பொதுமக்களின் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Next Story