பேராவூரணியை நகராட்சியாக தரம் உயர்த்தித் தர என்.அசோக்குமார் எம்எல்ஏ சட்டமன்றத்தில் கோரிக்கை

பேராவூரணியை நகராட்சியாக தரம் உயர்த்தித் தர என்.அசோக்குமார் எம்எல்ஏ சட்டமன்றத்தில் கோரிக்கை
நகராட்சி
பேராவூரணி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தித் தர வேண்டும் என சட்டமன்றத்தில் பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார் கோரிக்கை விடுத்தார். சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமை அன்று கேள்வி நேரத்தின் போது பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார் பேசியதாவது, பேராவூரணி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி தரப்படுமா...? பேராவூரணி நகரில் பட்டுக்கோட்டை சாலை, சேது சாலை, அறந்தாங்கி சாலை, ஆவணம் சாலை ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தரப்படுமா...? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்துப் பேசிய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை. பேரூராட்சிக்கு வருமானம் இருந்தால், போதிய அளவு மக்கள் தொகை இருந்தால் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தலாம். இந்த ஆண்டு 25 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, போதுமான வருமானமும், 15 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகையும் இருந்தால், பேராவூரணி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த பரிசீலிக்கப்படும். இதேபோல், பல உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டபடி சாலைப் பணிகளோடு கழிவுநீர் வாய்க்கால், மழை நீர் வடிகால் வாய்க்கால் சேர்த்தே இனி அமைக்கப்படும். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்" என்றார். தரம் உயரும்  பேராவூரணி பேரூராட்சியில் கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில், தற்போது சுமார் 30 ஆயிரத்தையும் தாண்டி இருக்கக்கூடும். மேலும், பேரூராட்சியின் பல்வேறு வகை வரிவசூல் சுமார் ரூ.3 கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதை விட  குறைவான மக்கள் தொகையும்,  குறைவான வருமானமும் உள்ள பல பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் முயற்சியால் பேராவூரணியும் விரைவில் நகராட்சியாக தரம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story