ஜல்லிக்கட்டு போட்டி, முன்னேற்பாடுகள் தீவிரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
Namakkal (Off) King 24x7 |11 Jan 2025 2:34 PM GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், எருமப்பட்டி பொன்னேரியில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி மாவட்ட ஆட்சியர் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து காவல் துறை, வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழுவினர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.ஜல்லிக்கட்டு போட்டிக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினரும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடுப்பு வேலிகள், பாதுகாப்பு அம்சங்கள், மக்கள் அமரும் பார்வையாளர் மாடம், மேடைகள், ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து வருவதற்குரிய பாதைகளுக்கான தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை பொதுப்பணித் துறையினரும் ஆய்வுசெய்து தகுதிச்சான்று, அமரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர்களால் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு உடற்கூறு தகுதி என சான்றளிக்கவும், மத்திய பிராணிகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டுமெனவும், காளைகள் போட்டியின்போது காயமுற்றால் அவைகளுக்கு போதுமான சிகிச்சை அளிக்க விளையாட்டுத் திடல் அருகில் போதுமான மருந்துகள் மற்றும் கால்நடை மருத்துவர்களுடன் மருத்துவ முகாம் அமைக்கவும் அறிவுறுத்தினார்.மேலும், வாடிவாசல் மற்றும் காளைகள் ஓடுதளம், காளைகளை வாடிவாசலுக்கு அழைத்து வரும் வழி, மருத்துவ குழுவினரின் இருப்பிடம் மற்றும் பார்வையாளர்களின் மாடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து, குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை அரசுத்துறை அலுவலர்களுக்கு வழங்கினார். இந்த ஆய்வுகளின் போது நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.பார்தீபன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.வீ.பழனிவேல், சேந்தமங்கலம் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story