தறிகெட்டு ஓடிய கார் வேப்பமரத்தில் மோதி விபத்து!
Thoothukudi King 24x7 |18 Jan 2025 5:00 AM GMT
கோவில்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி, மின்கம்பத்தில் மோதி பறந்து வேப்பமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் பாக்கியவிளை பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன் (50). இவர் விவசாயம் செய்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் புதூரில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்று விட்டு, தனது காரில் பாலசந்திரன் ஊருக்கு திரும்பி உள்ளார். காரை அவரே ஓட்டி வந்துள்ளார். கார் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் பகுதியில் வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியுள்ளது. சாலையின் ஓரத்தில் இருந்து மின்கம்பத்தில் மோதி, பறந்த கார், அப்பகுதியில் மதன் என்பவரது வீட்டின் முன் இருந்த வேப்பமரத்தின் மையப்பகுதியில் தட்டி கீழே விழுந்து விபத்துக்குள்ளனாது. இதில் காரை ஓட்டி வந்த பாலசந்திரன் ஒரு சிறு காயம் கூட இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் வீட்டின் முன் மரம் இருந்த காரணத்தினால் அதில் மோதி கார் நின்றது. இல்லையெனில் கார் வீட்டிற்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கும். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story