திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை தை உத்திர வருஷாபிஷேகம்
Thoothukudi King 24x7 |18 Jan 2025 5:08 AM GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் (ஜன. 19) ஞாயிற்றுக்கிழமை தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெறுகிறது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை (ஜன. 19) ஞாயிற்றுக்கிழமை தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இது குறித்து திருக்கோயில் இணை ஆணையர் சு.ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவரான சுப்பிரமணியர் பிரதிஷ்டை செய்தது தை உத்திர நட்சத்திரம் ஆகும். எனவே, ஆண்டுதோறும் தை மாதம் உத்திர நட்சத்திரத்தன்று இத்திருக்கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. நிகழாண்டு தை உத்திர வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) திருக்கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் விமான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறும். இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது| 7 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான், தேவசேனா அம்மன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருகின்றனர். திருக்கோயிலில் இரவு நடைபெறும் புஷ்பாஞ்சலிக்கு பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு அழகும், மணமும் மிக்க நன் மலர்களை (கேந்திப்பூக்களை தவிர) அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக உள்துறை கண்காணிப்பாளர் வசம் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story