பொதுமக்கள் காத்திருக்கும் போராட்டம்

பொதுமக்கள் காத்திருக்கும் போராட்டம்
X
பொதுமக்கள் கோபி தாலுகா அலுவலக முன்பு விடிய விடிய காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
குண்டேரிப்பள்ளம் அணை அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்து ஆழ்குழாய் கிணறு அமைத்து சுமார் 6 கிலோ மீட்டர் தனியார் விவசாய நிலத்துக்கு கொண்டு செல்ல கொங்கர்பாளையம் ஊராட்சி வினோபா நகர் உள்ளிட்ட கிராம மக்கள் எதிர்ப்பால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் பைப் லைன் அமைக்கும் பணி நடந்தது. டி.என்.பாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையானது குன்றி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. குண்டேரிப்பள்ளம், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், வினோபா நகர், கோவிலூர் உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்கள் இந்த அணையின் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது. இது தவிர 10 கிராமத்திலும் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் இந்த அணையின் மூலமாக நீர்த்தேக்கம் ஏற்படுகிறது.இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு குண்டேரிப்பள்ளம் அணை அருகே உள்ள விவசாய நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, அங்கு இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் தங்கவேல் உட்பட 6 பேருக்கு சொந்தமான 50 ஏக்கர் விவசாய நிலத்திற்கு பிளாஸ்டிக் குழாய்கள் அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல முயன்றனர்.தனியார் நிலத்திற்கு தண்ணீர் கொண்டு சென்றால் குண்டேரிப்பள்ளம் அணையின் நிலத்தடி நீர் மட்டும் குறையும்.வனப்பகுதியை ஒட்டியே இந்த கிராமங்கள் உள்ளதால், அணையில் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டால், வனவிலங்குகள் பாதிக்கப்படுவதோடு, யானைகள், மான்கள் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் தேவைக்காக ஊருக்குள் வந்து விடும் என்று கூறி அப்பகுதியை சேர்ந்த 10 கிராம மக்களும் கடந்த 6 ஆண்டுகளாக போராடி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல தனியார், நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று குழாய் அமைக்க நடவடிக்கை எடுத்தனர், ஆனால் கிராம மக்களின் தொடர் போராட்டம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று காவல்துறை பாதுகாப்புடன் போலீசார் குவிக்கப்பட்டு மீண்டும் பிளாஸ்டிக் (பிவிசி) குழாய் அமைக்க நடவடிக்கை எடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் நேற்று முன் தினம் மாலை முதல் 200க்கும் மேற்பட்டோர், பெண்கள், ஆண்கள், சிறுவர்கள், பள்ளி மாணவ, மாணவிகளுடன் கோபி தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு சென்றனர். அங்கு தாசில்தார் சரவணனிடம் நீதிமன்றம் மூலம் தனியார் வாங்கிய உத்தரவின் படி பைப் லைன் அமைக்காமல் 10-க்கும் மேற்பட்ட பல்வேறு விதி மீறல்கள் செய்து தனியார் பைப் அமைப்பதை ரத்து செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோபி வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்த பிறகே பைப் லைன் அமைககப்பட வேண்டும் என்று கோரிக்கைகளை முன்னிருத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் கோபி தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு சென்ற கொங்கர்பாளையம் ஊராட்சி கிராம மக்கள் விடிய விடிய குளிரில் தாலுகா அலுவலகத்தின் வாசலில் பெட்சிட் விரித்து தங்கினர், உணவு வெளியில் சமைக்கப்பட்டு கொண்டு வந்து சாப்பிட்டனர்.இரண்டாவது நாளாக நேற்றும் கோபி தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் கொங்கர்பாளையம் ஊராட்சியை சேர்ந்த வினோபாநகர், கோவிலூர், தோப்பூர் வாணிப்புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகளை ஏற்படுத்தி, கிராமத்தில் உள்ளவர்கள் வெளியேறாமல் தடுத்தும், கிராமத்திற்குள் செல்பவர்கள் குறித்த முழு விபரங்களையும் பெற்ற பின்பே அவர்களை காவல்துறையினர் கிராமத்திற்குள் அனுமதித்தனர்.குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் இரண்டு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் ரிசர்வ் போலீசார் உட்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, 7 ஜே.சி.பி.இயந்திரங்கள் மூலமாக கிராம மக்களின் எதிர்ப்பை மீறி சம்பவ இடங்களில் குழாய் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றது.முன்னதாக குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த 18 பெண்களை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார் டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். இந்நிலையில் மக்களின் எதிர்ப்பை மீறி போலீசார் வருவாய் துறையினர், நீர்வள ஆதாரத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உதவியோடு குழாய் அமைக்கும் பணி நடைபெற்று..வாணிப்புத்தூர் கொங்கர் பாளையம் குண்டேரிபள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஆங்காங்கே குவிக்கப்பட்டதால் காலை முதல் மாலை வரை கொங்கர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியது. வினோபா நகரை அடுத்த விளோஙகோம்பை செக்போஸ்ட்டில் இருந்து எஸ்.டி.காலனி செல்லும் சாலை வழியாக ஜேசிபி மூலம் அடுத்தடுத்து ஜேசிபி மூலம் குழிகள் தோண்டப்பட்டு வந்த போது, தனியார் சிலர் தாசில்தார் சரவணன் உட்பட வருவாய் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதில் தனியார் சிலர் தகாத வார்த்தைகளால் பேசியதை தொடர்ந்து வருவாய் துறை மற்றும் போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது.சிறிது நேரம் கழித்து பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஜேசிபி மூலம் பைப் லைன் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.கோர்ட் உத்தரவின் படி நேற்று மாலை வரை பைப் லைன் அமைக்கும் பணி நடைபெறும் என்றும், முடிவடையாத பணிகள் அடுத்த நாள் தொடர்ந்து நடைபெற்று பைப் லைன் முழுமையாக போடப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Next Story