காவேரிப்பாக்கத்தில் கோவில் உண்டியல் உடைத்த திருடர்கள் கைது!

X

கோவில் உண்டியல் உடைத்த மூன்று பேர் கைது
காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் உள்ள கொண்டியம்மன் கோவில், அன்னியம்மன் கோவில் மற்றும் ஐயப்பன் கோவிலில் கடந்த 31-ந் தேதி இரவு மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணம் மற்றும் அன்னியம்மன் சிலையின் கழுத்தில் இருந்த 4 பவுன் நகையை திருடிச்சென்றனர். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ராமதுரை மற்றும் போலீசார் காவேரிப்பாக்கம் -அத்திப்பட்டு சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை மடக்கி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கல்பலாம்பட்டு பஜனை கோவில் தெருவை சேர்ந்த அரவிந்தன் என்கிற சப்பை (வயது 27), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவசங்கரன் என்கிற சந்திரன் (34), கிருஷ்ணமூர்த்தி என்கிற ரஜினி (38), என்பதும், புதுப்பட்டு கிராமத்தில் கோவில் உண்டியலை உடைத்து திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர் களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் 4 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Next Story