கழிவு நீர் ஓடாததால் தேங்கி நிற்கும் குப்பைகள் - கொசுக்களால் பொதுமக்கள் பாதிக்கும் அபாயம்

கழிவுநீர் தேங்காமல் வடிய தூர்வார நகராட்சிக்கு கோரிக்கை
நாகை மாவட்ட வளர்ச்சி குழுமத்தின் தலைவர் என்.பி.பாஸ்கரன், நாகை மாவட்ட ஆட்சியர், நாகை நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது பாரதி மார்க்கெட் அருகில் உள்ள வடிகால் வாய்க்காலில் தேங்கியுள்ள குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் ஓடாமல் தேங்கி நிற்கிறது. மேலும், வடிகாலில் குப்பைகள் நிறைந்து ஒரே இடத்தில் தேங்கி நிற்கிறது, இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், பாரதி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்த வடிகால் வாய்க்கால், புனித அந்தோணியார் பள்ளியில் முன்பிருந்து தொடங்கி, தேவி தியேட்டர் வழியாக பாரதி மார்க்கெட் அருகில் ஓடுகிறது. அவ்வாறு ஓடும் வடிகால் வாய்க்கால், பாரதி மார்க்கெட் அருகில் தேங்கி நிற்கிறது. இதன் அருகில் உள்ள சிறிய பாலத்தில் நல்ல தண்ணீர் பைப் லைன் சொல்கிறது. இதனால், குப்பைகள் தேங்கி நின்று மழை நீர் மற்றும் சாக்கடைக் கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால், மலேரியா கொசுக்கள், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. இதனால், குழந்தைகளும், வயதானவர்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது. வடிகால் பாலத்தின் அருகில் நல்ல தண்ணீர் பைப் லைன் செல்வதால், நகராட்சி நிர்வாகம் வடிகால் வாய்க்காலை சுத்தம் செய்யும் போது, ஜேசிபி இயந்திரம் பைப் லைனில் பட்டு உடைந்து விடுகிறது. அதில் சாக்கடை கழிவு நீர் கலந்து, குடிநீர் அசுத்தமாக வருகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி கழிவுநீர் தேங்காமல் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story