மண் பரிசோதனை நிலையத்தை அணுகி, விவசாயிகள் பயன் பெறலாம்

X

மண் பரிசோதனை நிலையத்தை அணுகி, விவசாயிகள் பயன் பெறலாம்
மதுராந்தகம் மண் பரிசோதனை செய்து, உரச்செலவை குறைத்து அதிக மகசூலை பெற, விவசாயிகளுக்கு மதுராந்தகம் வேளாண்மைத் துறை ஆலோசனை வழங்குகிறது. இதுகுறித்து, மதுராந்தகம் வேளாண்மை உதவி இயக்குநர் நெடுஞ்செழியன் கூறியதாவது: மண்ணில் தோன்றும் கோளாறுகளை அவ்வப்போது அறிந்து சீராக்கவும், மண்ணில் உரச்சத்து இருப்பை அறிந்து கொண்டு, உரங்களை தேவைக்கேற்ப இடவும் மண் பரிசோதனை தேவைப்படுகிறது. மண் பரிசோதனை முடிவை வைத்து மண்ணின் அமில, கார நிலை, மின் கடத்தும் திறன், சுண்ணாம்பு இருப்பு நிலை, மண்ணின் வகை அறிந்து பயிரிட வேண்டும். பேரூட்ட சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியவற்றின் நிலைகளும், நுண்ணுாட்ட சத்துக்களின் நிலைகளும் அறிந்து, அதற்கேற்ப உரங்களை இட்டு, உரச்செலவை குறைத்து, அதிக மகசூல் பெற மண் பரிசோதனை அவசியம்.விவசாயிகள் நிலத்தின் அமில, கார தன்மை, சுண்ணாம்பு நிலை, உப்பின் நிலை அறிந்து, அதற்கேற்ப நில சீர்திருத்தம் செய்து, நிலத்தின் தன்மைக்கேற்ப பயிர் ரகங்களை தேர்ந்தெடுத்து விவசாயம் செய்ய வேண்டும். மண்ணின் தன்மையை அறிய விரும்பும் விவசாயிகள், அப்பகுதி உதவி வேளாண்மை அலுவலகத்தில் மண் மாதிரிகள் அளித்து, மண் பரிசோதனை ஆய்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மண் பரிசோதனை முடிவில் குறிப்பிட்டுள்ளபடி உரங்களை இட்டு, விவசாயம் செய்து மகசூலை பெருக்கலாம். மதுராந்தகத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மண் பரிசோதனை நிலையத்தை அணுகி, விவசாயிகள் பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story