நீரேற்று மின்திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் உள்ள நிறுவனங்களுக்கு பசுமை எரிசக்திக் கழகம் அழைப்பு

X

தமிழகத்தில் நீரேற்று மின்திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் உள்ள நிறுவனங்களுக்கு பசுமை எரிசக்திக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் மின்தேவையைப் பூர்த்தி செய்ய அனல், காற்றாலை, சூரியசக்தி உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது. குறிப்பாக, நீர்மின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் நீரேற்று மின்திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் உள்ள நிறுவனங்களுக்கு பசுமை எரிசக்திக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. நீரேற்று மின்திட்டத்துக்கு மேல் அணை, கீழ் அணை இருக்க வேண்டும். மேல் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, மின்னுற்பத்திக்கு பயன்படுத்திய பிறகு கீழ் அணைக்கு வரும். இந்த தண்ணீர் அதிக திறன் உடைய மோட்டார் பம்ப் மூலமாக மேல் அணைக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த மின்திட்டத்தை செயல்படுத்தப்படும் போது ஆறுகளை மாசுபடுத்தக் கூடாது என்ற நிபந்தனை உள்ளது. எனவே, தனியார் முயற்சியில் நீரேற்று மின்திட்டம் அமைய உள்ள இடத்தில் ஆறு இருக்கக் கூடாது. திருநெல்வேலி போன்ற இடங்களில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நீர்வீழ்ச்சி கொட்டுகிறது. அதற்கு ஏற்ப, நீரேற்று மின்திட்டத்தை செயல்படுத்தும் இடத்தை தனியார் நிறுவனமே சுயமாக தேர்வு செய்ய வேண்டும். வனத்துறை, அரசிடம் இடமிருந்தால் அதற்கு நிறுவனம் அணுகினால் குத்தகைக்கு வழங்க வழிவகை செய்யப்படும். தனியார் இடத்தையும் குத்தகைக்கு எடுக்கலாம். இடத்தை தேர்வு செய்த பின் மின்திட்டத்துக்கு பசுமை எரிசக்தி கழகத்திடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி வழங்கப்பட்ட நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் மின்நிலைய கட்டுமான பணியை தொடங்க வேண்டும். 7 ஆண்டுகளுக்குள் கட்டுமான பணியை முடிக்க வேண்டும். அனைத்து அனுமதிக்கும் ஒற்றைசாளர முறையில் அனுமதி, பத்திரப்பதிவு கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story