டிராக்டரின் பின்னால் கார் மோதி விபத்து

X

முன்னாள் சென்ற டிராக்டரின் பின்னால் கார் மோதி விபத்து... சப் கலெக்டர் படுகாயம்
வேடசந்தூர் அருகே மினுக்கம்பட்டி பிரிவில் கருப்பதேவனூரை சேர்ந்த சுப்பிரமணி (வயது 55) என்பவர் வேடசந்தூர் நோக்கி டிராக்டரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது நாமக்கல்லில் இருந்து திண்டுக்கல் நோக்கி நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள அரசு சர்க்கரை ஆலையில் சப் கலெக்டராக பணியாற்றும் சிவக்குமார் (வயது 52 ) மதுரையை சேர்ந்தவர். இவர் பழனியில் ஆர்டிஓவாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஓட்டி வந்த கார் டிராக்டரின் பின்பக்கமாக பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது. இதில் சிவக்குமார் படுகாயம் அடைந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் பொதுமக்கள் கடப்பாரையால் காரை உடைத்து அவரை மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜவேல் உதவியாளர் கிருஷ்ணவேணி ஆகியோர் உயிருக்கு போராடிய அவரை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு வேடசந்தூர் அரசு தலைமை டாக்டர் லோகநாதன், பணியில் இருந்த மருத்துவர் பிரியதர்ஷினி ஆகியோர் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story