சில்லறை வியாபாரம் அமோகம்

சில்லறை வியாபாரம் அமோகம்
X
தொடர் முகூர்த்தம் காரணமாக ஈரோடு ஜவுளி வார சந்தையில் சில்லறை வியாபாரம் விறுவிறுப்பு
ஈரோடு ஜவுளி வாரச்சந்தை தென்னிந்திய அளவில் புகழ்பெற்றதாகும். திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளி வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் துணிகளை ஒட்டுமொத்தமாக வாங்கி செல்வார்கள். சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ஜவுளி வார சந்தையில் விற்பனை மந்தமாக இருந்தது. வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டது. சில்லறை விற்பனை பெயர் அளவில் மட்டும் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் ஜவுளி வார சந்தை கூடியது. பல்வேறு இடங்களில் இருந்து வந்த சிறு வியாபாரிகள் ஜவுளிக்கடைகளை அமைத்திருந்தனர். கர்நாடகா, கேரளா போன்ற பகுதிகளில் இருந்து வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. ஆந்திராவில் மட்டும் இருந்து ஒரு சில வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரத்தில் மொத்த வியாபாரம் மந்தமாக நடந்தது. ஆனால் அதே நேரம் தொடர் முகூர்த்தம், தொடர்ந்து கோயில்களின் திருவிழா வருவதால் இன்று சில்லறை விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறும்போது, கடந்த ஒரு மாதமாக ஜவுளி வார சந்தையில் பல்வேறு காரணங்களால் வியாபாரம் மந்த நிலையில் நடந்து வந்தது. ஆனால் இன்று கூடிய சந்தையில் உள்ளூர் வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்ததால் சில்லறை விற்பனை வழக்கத்தை விட அதிகமாக நடந்தது. இன்று மட்டும் 40 சதவீதம் சில்லறை விற்பனை நடைபெற்றது. அதே சமயம் வெளிமாநில வியாபாரிகள் ஆந்திராவில் இருந்து ஒரு சிலர் மட்டுமே வந்திருந்தனர். கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் மந்தமாக நடந்தது. இன்று 30 சதவீதம் மட்டுமே மொத்த வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தற்போது வெயில் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் காட்டன் துணிகள் அதிக அளவில் விற்பனையாகி வருவதாகவும் தெரிவித்தனர்.
Next Story