தயாநிதி மாறனின் அவதூறு வழக்கில் விடுவிக்க கோரிய மனுவை வாபஸ் பெற்றார் பழனிசாமி

X

தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்திருந்த மனு வாபஸ் பெறப்பட்டதையடுத்து விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளரான பார்த்தசாரதியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி, மத்திய சென்னை தொகுதி திமுக எம்.பி.யான தயாநிதிமாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். அதையடுத்து பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், தொகுதி நிதியை முறையாக செலவு செய்துள்ளதாகக் கூறி புள்ளி விவரப்பட்டியல் வெளியிட்டு, தனக்கு எதிராக பழனிசாமி தவறான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக தயாநிதி மாறன் தெரிவி்த்திருந்தார். இந்த அவதூறு வழக்கு சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பழனிசாமி தாக்கல் செய்திருந்த மனுவை நிராகரிக்க வேண்டுமென தயாநிதி மாறன் தரப்பில் ஏற்கெனவே வாதிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பழனிசாமி தரப்பில், இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் ஏப்.9-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.
Next Story