மஞ்சுவிரட்டில் உற்சாகத்துடன் கலந்து கொண்ட வாலிபர்கள்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ வல்லடிகாரர் கோவில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் 28ஆம் தேதி பாரிவேட்டையுடன் கோவிலின் மாசி திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று (மார்ச் .13) நாயத்தான்பட்டியில் மஞ்சுவிரட்டு விழா அரசு அனுமதியுடன் நடைபெற்றது. நாயத்தான்பட்டி, அம்பலக்காரன்பட்டி, வெள்ளலூர், உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, மலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டு நயத்தான்பட்டியில் உள்ள மஞ்சுவிரட்டு தொழுவத்தில் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. முன்னதாக மேளதாளங்கள் முழங்க கிராம அம்பலகாரர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஜவுளி மூட்டைகளை சுமந்து வர முதலில் சிங்கம்புணரி சேவபெருமாள் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனைத் தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக கொண்டுவரப்பட்டிருந்த அனைத்து காளைகளுக்கும் வேஷ்டி துண்டு மரியாதைகள் செய்து அவிழ்த்து விடப்பட்டன. திமிரிப்பாய்ந்த காளைகளை வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் நின்று மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் மடக்கிப் பிடித்தனர். இந்த மஞ்சுவிரட்டு விழாவில் ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Next Story




