வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது!

X
கழுகுமலை அருகே வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கெச்சிலாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் குமாரசாமி மகன் செந்தில்மள்ளர் (47). இவர் மள்ளர் மீட்பு கழகத்தின் நிறுவன தலைவராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மதுபோதையில் அப்பகுதியில் உள்ள விதவை பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறு செய்து, அவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் கூச்சலிட்டார். உடனே பெண்ணின் அண்ணன், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து செந்தில் மள்ளரை எச்சரித்தனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதுகுறித்து கழுகுமலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் செந்தில்மள்ளரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் டிஎஸ்பி ஜெகநாதன் விசாரணை மேற்கொண்டார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் மள்ளரை கைது செய்தனர். இதேபோல் விதவை பெண்ணின் அண்ணன், உறவினர்கள் தன்னை தாக்கியதாக செந்தில் மள்ளர் அளித்த புகாரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story

