சாலைவிதிகளை மீறிய பள்ளி வாகனம் மோதி ஆசிரியர் பலி -

X

கோவில்பட்டியில் சாலை விதிகளை மீறி ஒருவழி சாலையில் சென்ற பள்ளி வாகனம் பைக் மீது மோதிய விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவில்பட்டியில் சாலை விதிகளை மீறி ஒருவழி சாலையில் சென்ற பள்ளி வாகனம் பைக் மீது மோதிய விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திதோப்பு சாலையைச் சேர்ந்தவர் வெங்கட ராமானுஜம் மகன் சீனிவாசன் (55), அரசுப் பள்ளி ஆசிரியரான இவர் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தவறான திசையில் வந்த காமராஜ் மெட்ரிக் பள்ளியின் பேருந்து மீது மோதியதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்பட்டி மாதங் கோவில் சாலை என்பது ஒருவழிப்பாதை, இந்த பாதையில் தனியார் பள்ளி வாகனம் சாலை விதிமுறைகளை மீறி எதிர் திசையில் திடீரென வந்த காரணத்தினால் தான் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த ஆசிரியர் சீனிவாசன் மனைவி வீரலட்சுமி, இவர் கே. புதுப்பட்டியில் அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கோவில்பட்டியில் மாதங்கோவில் சாலை ஒரு வழிப் பாதை என்று போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு செய்திருந்தாலும் பல நேரங்களில் வாகனங்கள் சாலை விதிகளை மீறிதான் அந்த சாலைகளில் பயணிக்கின்றன. இதனால் தொடர்ந்து விபத்துகளும் நடந்து வருகிறது. .நடவடிக்கை எடுக்க வேண்டிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து அலட்சியமாக இருந்து வருவதால் இது போன்ற விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Next Story