சூலூர் அத்தனூர் அம்மன் கோயிலில் பண்டார வேஷ ஆட்டம்: பக்தர்கள் பரவசம்!

X
சூலூர் மார்க்கெட் ரோட்டில் அமைந்துள்ள 1400 ஆண்டுகள் பழமையான சேர நாட்டுக் கோயிலான அத்தனூர் அம்மன் கோவிலில், 32வது ஆண்டு திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த மே 13-ம் தேதி சாமி சாட்டுதலுடன் தொடங்கிய இத்திருவிழா, அக்னி கம்பம் நடுதலுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினசரி அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடி வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பண்டார வேஷமும், அம்மை அழைத்தலும் நேற்று இரவு விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வாக, இன்று நொய்யல் ஆற்றில் இருந்து மேள, தாளத்துடன் சப்பரத்தில் அம்மன் அழைத்து வரப்பட்டார். ஏராளமான பெண்கள் தீர்த்தக் குடங்கள் மற்றும் பால் குடங்கள் எடுத்து வந்தனர். அப்போது, பண்டார வேஷம் கட்டி ஆடும்போது, கோவில் பூசாரி பக்தி பரவசத்துடன் துடும்பு இசைக்கு ஏற்ப நடனமாடியது காண்போரை வெகுவாகக் கவர்ந்தது. பூசாரியின் பக்திப் பரவசமான ஆட்டத்தைக் கண்ட அருகிலிருந்த பக்தர்களும் அவருடன் இணைந்து ஆடினர். இது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் விதமாக அமைந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் மற்றும் திருக்கல்யாண திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற்றனர்.
Next Story

