போக்சோ வழக்கில் கைதானவர் பயணிகள் ரயில் மோதி படுகாயம்

விபத்து செய்திகள்
விராலிமலை: விராலிமலை ஒன்றியம் மண்டையூர் பவளம் நகரை சேர்ந்தவர் மதியரசன்(25). அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். விடுமுறை நாட்களில் நிகழ்ச்சிகளில் ட்ரம் செட் அடிக்கும் வேலைக்கும் சென்று வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட மதியரசன் ஒரு மாதத்துக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்தார். இதனால் மனஉளைச்சலுடன் காணப்பட்டார். நேற்று முன்தினம் மாலை தொண்டைமான்நல்லுார் சுங்கச்சாவடி அருகே ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற பயணிகள் ரயில் மோதியதில், அவரது 2 கால்களும் துண்டாயின. இதையடுத்து ரயில் இன்ஜின் டிரைவர் மதியரசனை மீட்டு ரயிலில் ஏற்றி கீரனூரில் ரயில்வே ஊழியர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் மதியரசன் ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்ப ட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story