தூய்மை பணியாளர் திட்ட முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க தேவையில்லை: சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

X

தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரணை தேவையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி’ திட்டத்தை தமிழக அரசும், தூய்மைப் பணியாளர்களுக்கு 50 சதவீத மானியத்துடன், நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் ‘நமஸ்தே’ திட்டத்தை மத்திய அரசும் செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோராக்கும் திட்டங்களை செயல்படுத்தியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி யூடியூபரான சவுக்கு சங்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், இந்த திட்டங்கள் சட்டவிரோதமாக தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை மற்றும் ஜென் கிரீன் லாஜிஸ்டிக்ஸ் என்ற தனியார் அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு, அதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்துள்ளது. இந்த அமைப்புகளின் முக்கிய நிர்வாகியாக உள்ள வீரமணி, காங்கிரஸ் மாநிலத் தலைவரான செல்வப்பெருந்தகையின் நெருங்கிய உறவினர். இதனால் உண்மையான பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் பலன்கள் சென்றடையவில்லை. எனவே இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மாதம் நடந்தது. அப்போது அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ‘‘தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் இந்த திட்டத்தின் கீழ் 213 தகுதியான பட்டியலின வகுப்பைச் சேர்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார். தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் தலைவராக உள்ள ரவி்க்குமார் நாரா நேரில் ஆஜராகி, ‘‘தற்போது ஜென் கிரீன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து வீரமணி விலகிவிட்டார்’’ என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘தூய்மைப் பணியாளர்களுக்காக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் பலன் உண்மையான பயனாளிகளுக்கு சென்றடைய வேண்டும். எனவே இத்திட்டத்தில் ஒப்பந்தம் செய்துள்ள 213 தூய்மைப் பணியாளர்களையும் 12 வார காலத்துக்குள் தங்களது பங்குதாரர்களாக தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை சேர்க்க வேண்டும். இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய தேவையில்லை’’ எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
Next Story