அரக்கோணத்தில் மூன்று கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

X
அரக்கோணத்தில் நேருஜி நகர் 5-வது தெருவில் உதயகுமார் என்பவர் மளிகைக் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்ததும் உதயகுமார் கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. இதேபோல் அரசு மருத்துவமனை அருகே ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்திவரும் சாய் என்பவரது கட்டிடத்தில் ரூ.50 ஆயிரமும், சுவால்பேட்டை பகுதியில் பிரபாகரன் என்பவர் நடத்தி வரும் பால்கடையில் ரூ.25 ஆயிரமும் நள்ளிரவு வந்த மர்மநபர்கள் திருடிவிட்டு தப்பி உள்ளனர். இது குறித்து 3 பேரும் அரக்கோணம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி.கேமராவை பார்த்தனர். அதில் 2 பேர் சர்வசாதாரணமாக இரும்புக்கம்பியால் கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடிவிட்டு பயமின்றி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இது தொடர்பான சி.சி.டி.வி. கேமரா காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.நகரின் முக்கிய பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

