சேலம் மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்புவிழா

X
சேலம் இரும்பாலையில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரியில் 30-வது இளங்கலை பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மருத்துவ படிப்பு முடித்த 98 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையானது கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு சிறப்புக்குரிய டாக்டர்களை நாட்டிற்கு அளித்து வருகிறது. தி.மு.க. அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு கம்யூனிட்டி மெடிசன் முதுகலை பட்டப்படிப்புகள் 1-ம், அலைடு ஹெல்த் சயின்ஸ்- 4 பட்டப்படிப்புகளும் இக்கல்லூரியல் உருவாக்கி தரப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் சேலம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ரூ.65.43 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்தாண்டு நிதிநிலை அறிவிப்பில் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு விடுதிகள் மேம்பாட்டு பணிகள், சிறப்பு பச்சிளங்குழந்தை பராமரிப்பு பிரிவுக்கு அதிநவீன கருவிகள், குழந்தைகள் நலப்பிரிவு மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ.2.28 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்படவுள்ளது. சேலம் மாவட்டத்தில் 35 நகர்ப்புற நலவாழ்வு மைய மருத்துவமனை கட்டிடங்கள், 39 சுகாதார மையங்களும், 51 ஆரம்ப சுகாதார நிலையங்களில் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடங்கள், செவிலியர் குடியிருப்பு கட்டிடங்கள், புறநோயாளிகள் கட்டி டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேலம் மாவட்டத்தில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேலம் அரசு மருத்துவகல்லூரியில் படித்து பட்டம் பெற்றுள்ள மருத்துவ மாணவர்கள் மருத்துவப்பணியில் சிறப்பாக பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். சுற்றுலாத்துறை அமைச்சர் முன்னதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசும்போது, மருத்துவ படிப்பு முடித்து பட்டங்களை பெற்றுள்ள மாணவ, மாணவிகள் எதிர்காலத்தில் சிறந்த டாக்டர்களாக உருவாகி சமூகத்திற்கு சிறப்பான சேவை புரிய வேண்டும், என்றார்.
Next Story

