ஏற்காட்டில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்:

ஏற்காட்டில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்:
X
உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டம்
ஏற்காட்டில் ஒண்டிக்கடை, ஏற்காடு டவுன் மற்றும் வனத்துறை அலுவலகத்தின் அருகே தினந்தோறும் மாடுகள் சாலையிலேயே சுற்றித்திரிகின்றன. இவ்வாறு கால்நடைகள் சுற்றித்திரிவதால் மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் மாடுகளின் மீது மோதி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் மாடுகள் சாலைகளில் நடுரோட்டில் நிற்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனை கண்டித்து நேற்று ஒண்டிக்கடை ரவுண்டானா பகுதியில் ஏற்காடு வாழ்வுரிமை கூட்டியக்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், ஏற்காடு பகுதியை சேர்ந்த அனைத்து கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. சித்ரா கலந்து கொண்டு இந்த பிரச்சினைக்கு அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதில் ஏற்காடு வாழ்வுரிமை கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் தேவபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்ட முடிவில் அனைவரும் ஒன்று கூடி ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இது தொடர்பாக மனு ஒன்றை அளித்தனர். இதில், மாடு வளர்க்கும் உரிமையாளர்கள் மாடுகளை மேய்ச்சலுக்கு தாங்களே கூட்டி சென்று வர வேண்டும். மாடுகளை சாலையில் மேய விடக்கூடாது, அரசு அதிகாரிகள் மாடுகளின் உரிமையாளர்களை அழைத்து ஒரு கூட்டம் நடத்தி மாடுகளை வளர்க்கும் வரைமுறைகளை அவர்களுக்கு தெரிவித்து சாலைகளில் விடக்கூடாது என வலியுறுத்த வேண்டும், மீறி சாலைகளில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும், மீண்டும் மீண்டும் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து கோசாலைகளில் கொண்டு சேர்க்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் மனுவில் இடம் பெற்று இருந்தன. இந்த மனுவை பெற்றுக்கொண்ட ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் மனு குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Next Story