சேலம் கோரிமேடு ருத்ரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

சேலம் கோரிமேடு ருத்ரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
X
நாளை மறுநாள் நடக்கிறது
சேலம் கோரிமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனியில் ஞானாம்பிகை உடனுறை ருத்ரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருப்பள்ளியறை கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும். இதையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், குபேர வைபவ மகாலட்சுமி ஹோமமும், அதை தொடர்ந்து மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு முதல் கால யாக வேள்வி பூஜையும், கும்ப மூர்த்தியாக சொக்கர், சொக்கி மற்றும் பள்ளி அறை விமானம் யாக சாலைக்கு எழுந்தருளல், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சொக்கர், சொக்கி மற்றும் பள்ளியறை விமானம் சம காலத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து மகா அபிஷேகம், தசதானம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ருத்ரேஸ்வருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் அன்னதானம் நடைபெறும். இக்கோவிலில் நவக்கிரகங்கள் நேர்கோட்டில் அமைந்திருப்பதும், மூலவரான ருத்ரேஸ்வரர் மேற்கு நோக்கி அமைந்திருப்பதும், மூலவர் தம்பதி சமேதராக அருள்பாலிப்பதும் சிறப்பாக கருதப்படுகிறது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ருத்ரேஸ்வரர் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Next Story