அயோத்தியபட்டினம் அருகே பெண்ணிடம் நகை அபேஸ் செய்த விஏஓ கைது

அயோத்தியபட்டினம் அருகே பெண்ணிடம் நகை அபேஸ் செய்த விஏஓ கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே கருமாபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி ஸ்ரீரங்கம்மாள் (வயது 62). இவர், தென்னங்கீற்று தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். கடந்த மே மாதம் 26-ந் தேதி இவரது வீட்டுக்கு வந்த நபர், தென்னங்கீற்று விலை கேட்பது போல் நடித்து ஸ்ரீரங்கம்மாளிடம் பேச்சு கொடுத்து 1¼ பவுன் தங்க நகையை அபேஸ் செய்து விட்டு தலைமறைவானார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே பெண்ணை ஏமாற்றி நகையை அபேஸ் செய்தது கள்ளக்குறிச்சி மாவட்டம் தோட்டப்பாடி பகுதியை சேர்ந்த சின்னச்சாமி மகன் பிரபு (47) என்பது தெரிய வந்தது. இவர், கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து ஒழுங்கீன செயலால் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் தென்னங்கீற்று வாங்குவது போல் பேச்சு கொடுத்ததுடன், வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருவதாகவும், இதனால் கடன் வாங்கி திருப்பாத நகைகள் ஏலம் விடப்படுவதாகவும், அதனை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாகவும் கூறி ஸ்ரீரங்கம்மாளை பிரபு ஏமாற்றி நகையை வாங்கி சென்றதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒழுங்கீன செயலால் பிரபு தொடர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் கூறினர். கைதான பிரபு வாழப்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
Next Story