சீரான குடிநீர் வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை
தருமபுரி மாவட்டம் செட்டிக்கரை ஊராட்சி இந்திரா நகரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தருமபுரி ஆட்சியரிடம் நேற்று அளித்த மனுவில் செட்டிக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட நேரு நகர் பகுதியில் 2014-15-ம் ஆண்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டது முதல் தற்போது வரை இந்த தொட்டி பயன்பாடின்றி உள்ளது. எனவே, இப்பகுதியில் வசிப்பவர்கள் வாகனங்களில் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது. நேரு நகருக்கு வெகு அருகில் பல்வேறு திசைகளில் குடிநீர் குழாய் செல்கிறது. இவற்றில் ஒன்றில் இருந்து இணைப்பு வழங்கி நேரு நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் வழங்கி குடியிருப்புகளுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, செட்டிக்கரை ஊராட்சி பெருமாள் கோயில் பேருந்து நிறுத்தம் முதல் நீலாபுரம் வரையிலான மண் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால். இவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ, மாணவியர் முதல் கிராம மக்கள் வரை அனைவரும் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த சாலையை தார்சாலையாக மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது
Next Story



