மாபெரும் நெகிழி தவிர்ப்பு விழிப்புணர்வு மற்றும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு இயக்கத்தினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.
NAMAKKAL KING 24X7 B |27 Sept 2025 9:12 PM ISTநாமக்கல் மாவட்ட ஆட்சியர் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மாபெரும் நெகிழி தவிர்ப்பு விழிப்புணர்வு மற்றும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், மாபெரும் நெகிழி தவிர்ப்பு விழிப்புணர்வு மற்றும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு இயக்கத்தினை தொடங்கி வைத்தார். கடந்த 01.01.2019 முதல் “ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து தமிழ்நாடு அரசு மூலம் அரசாணை வெளியிட்டது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் 4-வது சனிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து நெகிழிப் பொருட்களை சேகரித்து அகற்றுதல், நெகிழிப் பொருட்களால் ஏற்படும் சுகாதாரக்கேடுகள் மற்றும் அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்து தீவிர விழிப்புணர்வு முகாம் நடத்திட உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் 25.01.2025 அன்று மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. அதன்படி, கடந்த 2025 ஜனவரி முதல் நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 4வது சனிக்கிழமை அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து தடை செய்யப்பட்ட நெகிழிப்பொருட்களை சேகரித்தல், அகற்றுதல், நெகிழிப் பொருட்களால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் மற்றும் அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோர்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் குமாரபாளையம் நகராட்சியில் மாபெரும் நெகிழி தவிர்ப்பு விழிப்புணர்வு மற்றும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் அனைவரும் எதிர்வரும் விழாக் காலங்கள் உட்பட அனைத்து நாட்களிலும் ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல், அவற்றிற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்களான மஞ்சப்பை போன்றவற்றை பயன்படுத்தலாம். மாபொரும் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாமினை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் நெகிழி பயன்பாடு குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. தொடர்ந்து நெகிழி பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அபராதம் விதிக்கப்படுவதோடு, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.தொடர்ந்து, குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நெகிழியில்லா நாமக்கல் என்ற பொருள் குறித்து நடைபெற்ற நடைபெற்ற பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் என்ற பெயரில் பாட்டு போட்டி, மீண்டும் மஞ்சப்பை வேண்டாம் பிளாஸ்டிக் வை தலைப்பில் ஓவியப் போட்டி மற்றும் மஞ்சப்பை அவமானம் அல்ல நம் அடையாளம் தலைப்பில் நாடகப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இவ்விழிப்புணர்வு பேரணியில் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜே.கே.கே நடராஜன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த 250 மாணவ, மாணவியர்கள், 50 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் மற்றும் 100 தூய்மைப் பணியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், குமாரபாளையம் நகராட்சி நகர்மன்ற தலைவர் விஜய்கண்ணன், குமாரபாளையம் மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் முனைவர் த.செல்வகணபதி, உதவி பொறியாளர் ரிஸ்வானா பேகம் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story



