திருமண மண்டபங்கள் மற்றும் விடுதி அரங்கில் நடத்தப்படும் கண்காட்சி விற்பனைக்கு தடை விதிக்க கோரிக்கை.

திருமண மண்டபங்கள் மற்றும் விடுதி அரங்கில் நடத்தப்படும் கண்காட்சி விற்பனைக்கு தடை விதிக்க கோரிக்கை.
X
தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் திருமண மண்டபங்கள் மற்றும் விடுதி அரங்கில் கண்காட்சி விற்பனை என்கிற பெயரில் பலர் தற்காலிக கடைகள் அமைத்து வணிகம் செய்து வருகின்றனர்.
இதனால் உள்ளூர் சிறு, குறு வணிகர்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இது போல் திருமண மண்டபங்கள் மற்றும் விடுதி அரங்கில் கண்காட்சி விற்பனை நடத்தக்கூடாது என உயர்நீதி மன்றம் உத்தரவு அளித்துள்ள நிலையில் அதனை மீறியும், மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையிடமும் எந்த ஒரு அனுமதியும் பெறாமலும் பல மண்டபங்களில் கண்காட்சி விற்பனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்திடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் புகார் அளித்ததை தொடர்ந்து, இது போன்று திருமண மண்டபங்களில் நடத்தப்படும் கண்காட்சி விற்பனைக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. எனினும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாமல் பல திருமண மண்டபங்களில் இது போன்ற கண்காட்சி விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள காலி இடங்களில் அந்த ஒரு அனுமதியும் பெறாமல், பாதுகாப்பு வசதிகள் துளியும் இன்றி திடீர் கடைகள் அமைத்து பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இது போன்று திருமண மண்டபங்களில் நடைபெறும் கண்காட்சி விற்பனை மற்றும் காலி இடங்களில் அமைக்கப்படும் திடீர் கடைகளுக்கு தடை விதித்து, மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, வணிகர்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். ஜெயகுமார் வெள்ளையன் மாவட்ட தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, நாமக்கல் மாவட்டம்
Next Story