திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கறிஞர்.

பெண் வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கறிஞரை நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாமக்கல் கொவசம்பட்டி வ.ஊ.சி.நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகன் சுரேந்தர் (வயது28) வக்கீலாக பணியாற்றி வருகிறார். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு நாமக்கல் சட்டக்கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும், வக்கீல் சுரேந்தருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த மாணவி, சுரேந்தரிடம் ஜூனியராக பணிக்கு சேர்ந்து உள்ளார்.இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சுரேந்தர் அந்த மாணவியை காரில் ஏற்காடு அழைத்து சென்று உள்ளார். அங்கு அறை எடுத்து தங்கியபோது விரைவில் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அந்த மாணவியை வக்கீல் சுரேந்தர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அப்போது நடந்த நிகழ்வுகளை செல்போனில் வீடியோ எடுத்து வைத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.பின்னர் தனது அலுவலகத்தில் வைத்தும், அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதில் மாணவி கர்ப்பம் ஆகிவிட்டார். இதையடுத்து சேலத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்து விட்டதாக தெரிகிறது.இந்த ஆண்டு மே மாதம் சட்டப்படிப்பை முடித்த அந்த மாணவி , சுரேந்தரிடம் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி உள்ளார். அதற்கு சுரேந்தர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த மாணவி நாமக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து , வக்கீல் சுரேந்தரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் சுரேந்தரின் தந்தை மணிவண்ணன், தாயார் வசந்தா, நண்பர் கபில் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story