ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியினை திறந்து வைத்த எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ்குமார்.

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நாமக்கல் மாவட்டம், லத்துவாடியில் திறந்து வைக்கப்பட்ட சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியினை , மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக, பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்துள்ளார்கள். இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.137.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 20 சமூகநீதி விடுதிக் கட்டடங்கள், ரூ.39.30 கோடி செலவில் 39 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கான வகுப்பறை கட்டடங்கள், ரூ.12.73 கோடி செலவில் பழங்குடியினர்களுக்கு தொல்குடி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 250 வீடுகள், ரூ.15.93 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 16 கிராம அறிவுசார் மையங்கள், ரூ.5.40 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9 பல்நோக்கு மையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , மாவட்ட ஆட்சியர் தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் , மேயலர் து.கலாநிதி முன்னிலையில், நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம் லத்துவாடியில் திறந்து வைக்கப்பட்ட சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியினை பார்வையிட்டு, மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கி, தொழிலாளர் நலத்துறையின் சார்பில் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 23 நபர்களுக்கு ரூ.61.89 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்ததாவது,தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இன்றைய தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.137.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 20 சமூகநீதி விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்துள்ளார்கள். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில் ரூ.7.62 கோடி மதிப்பீட்டில் 150 மாணவர்கள் தங்கும் வகையில் சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியும், செங்கரை ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் 136 மாணவியர்கள் தங்கும் வகையில் ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் சமூகநீதி மாணவியர் விடுதியும் மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விடுதியானது கழிவறை, குளியலறை, மின்சார வசதி, மாணவர்களுக்கு தனித்தனி கட்டில்கள், படிப்பதற்கு நாற்காலிகளுடன் கூடிய தனித்தனி மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது. தரைதளத்தில் உணவருந்தும் அறை மேசைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தளத்தளத்தில் மாணவர்களின் நலனுக்காக பல்நோக்கு மையம், சமையலறை பொருட்கள் வைப்பு அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, விடுதி காப்பாளருக்கு கழிவறையுடன் கூடிய அறை, காப்பாளர் அலுவலகம் ஆகிய வசதிகளுடன் இவ்விடுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளின் கூட்டு முயற்சியுடன் ‘நான் முதல்வன் திட்டத்தினை’ தொடங்கி வைத்தார்கள். அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் பயின்ற 33 மாணவ, மாணவியர்கள் பல்வேறு அனைத்திந்திய தேர்வுகள் மூலம் இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு பள்ளியில் பயின்ற மாணவர், வெளிநாடுகளில் இளங்கலை பட்டப் படிப்பு படிக்கின்றார் என்றால் அது மிகப்பெரிய சாதனையாகும். மாதிரி பள்ளி என்பது மிகப்பெரிய அடித்தளமாகும். மாதிரி பள்ளியில் ஆண்டுதோறும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சேர்க்கை நடைபெற்று வருகிறது. அரசு மாதிரி பள்ளியில் படிக்கும் பொழுது, தங்கும் விடுதி, உணவு, புத்தகம் அனைத்து இலவசமாக வழங்கப்படுகிறது. அரசு பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்கள் தலைச்சிறந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில அவர்களுக்கு தேவையான பயிற்சி வழங்க ஏற்படுத்தப்பட்டதே, அரசு மாதிரி பள்ளியாகும். அந்த வகையில் இன்றைய தினம் சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியானது ஏறத்தாழ 11 மாத காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு, இன்றைய தினம் மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயிலுவதற்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயின்றவர்கள் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை, அறிவியில், செவிலியர் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி பயில்வதை ஊக்குவித்திட 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. சொந்தமாக வீடு இல்லாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதியுதவி வழங்குதல் அல்லது வீட்டுமனை இல்லாதவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதிஉதவி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 23 பயனாளிகளுக்கு ரூ.61.89 இலட்சம் மதிப்பீட்டில் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் தாமாகவே வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தில் 98 நபர்களுக்கு ரூ.67.00 இலட்சம் உதவித்தொகையும், அடுக்குமாடி குடியிருப்பில் 62 நபர்களுக்கு ரூ.90.95 இலட்சம் மதிப்பில் வீடு ஒதுக்கீடும் வழங்கப்பட்டுளது. உடலுழைப்ப தொழிலாளர்கள் அனைவரும் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். கண் அறுவை சிகிச்சைக்கு உதவித்தொகை, மருத்துவ உதவி, கல்வி உதவி, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரண உதவித் தொகை கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்தார். தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறையின் சார்பில் வீட்டுவசதி திட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் 12 நபர்களுக்கு ரூ.17.89 இலட்சம் மதிப்பீட்டில் வீடு ஒதுக்கீடும், சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ள 11 நபர்களுக்கு ரூ.44.00 இலட்சம் மதிப்பீட்டில் நிதியுதவியும் என 23 நபர்களுக்கு ரூ.61.89 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் பெ.நவலடி, முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, தொழிலாளர் உதவி ஆணையார் (ச.பா.தி) கே.பி.இந்தியா, தாட்கோ செயற்பொறியாளர் கி.கண்ணன் (சேலம் கோட்டம்), உதவி பொறியாளர் செ. யுவராஜ் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Next Story