மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகளை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2025-26-ம் கல்வியாண்டிற்கான மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், காவேட்டிப்பட்டி குறிஞ்சி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2025-26-ம் கல்வியாண்டிற்கான மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகளை (இலக்கிய மன்றம், வினாடி வினா, சிறார் திரைப்படப் போட்டிகள்) தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, 2025-26-ம் கல்வியாண்டில் வட்டார அளவில் இலக்கிய மன்றம், வினாடி வினா, சிறார் திரைப்படப் போட்டிகளில் வெற்றி பெற்ற 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று (07.10.2025) முதல் 09.10.2025 வரை நடைபெறுகிறது. பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் கதை உள்ளிட்ட இலக்கிய மன்ற போட்டிகளில் 360 மாணவர்கள், 72 நடுவர்கள், 15 பொறுப்பாசிரியர்கள், கதை, வசனம், நடிப்பு, ஒலிப்பதிவு ஆகிய சிறார் திரைப்பட மன்ற போட்டிகளில் 180 மாணவர்கள், 27 நடுவர்கள், 15 பொறுப்பாசிரியர்கள், வினாடி வினா மன்ற போட்டிகளில் 135 மாணவர்கள், 9 நடுவர்கள் மற்றும் 15 பொறுப்பாசிரியர்கள் என 675 மாணவர்கள், 108 நடுவர்கள் மற்றும் 45 பொறுப்பாசிரியர்கள் பங்கேற்கின்றனர். மேலும் 2023-2025-ம் ஆண்டுகளில் 7 மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு மாநில அளவில் வெற்றி பெற்று, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு கல்வி சுற்றுலா பயணம் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு சிறப்பான திட்டமாகும். கல்வி மட்டுமல்லாது, நடைமுறை வாழ்க்கைக்கு தகுந்தாற்போல் நமது திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் மூலம் இதுபோன்ற வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அதிகளவிலான விழிப்புணர்வு உள்ளது. எனவே மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story