விவசாய தோட்டங்களில் இரவு நேரங்களில் மின்வயர்களை திருடி செல்லும் மர்மநபர்கள்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, மோகனூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஏராளமான விவசாய தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் இருந்து மின்மோட்டாருக்கு செல்லும் வயர்களை கடந்த 6 மாதங்களாக மர்ம நபர்கள் இரவு நேரங்களில் திருடி சென்றதால் ஒரு விவசாயிக்கு ரூ.50 ஆயிரம் வரை இழப்பு ஏற்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் புகார் அளித்தால் போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்து மாவட்ட வருவாய் அலுவலர் சுமனிடம் மின் மோட்டார் வயர்களை திருடிய மர்மநபர்களை கைது செய்ய வேண்டும், வயர்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்ககோரி மனு அளித்தனர். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு விவசாய முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம் அளித்த பேட்டியில்:- நாமக்கல் மாவட்டத்தில் விவசாய தோட்டத்தில் இருக்கும் மின்மோட்டார் வயர்களை மர்மநபர்கள் அடிக்கடி திருடி செல்கின்றனர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் வருகின்றனர், காவலர்கள் பற்றாக்குறையால் மர்மநபர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது, விவசாய தோட்டத்தில் உள்ள மின்மோட்டார்களின் மின் வயர்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், திருட்டு சம்பவத்தில் ஈடுப்படும் நபர்களை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம் என தெரிவித்தார்
Next Story